ஆடாதோடை மூலிகை
மனிதருக்கு வியாதிகள் அணுகாமல் காக்க, இறைவன் . மனிதர் வாழும் இடங்களில் பல்வேறு அரிய பலன்கள் அளிக்கவல்ல மூலிகைகளை, படைத்தே வைத்துள்ளார் . நம் அருகில் வெகு சாதாரணமாக காணக்கிடைக்கும் குப்பைமேனி, நாயுருவி, போன்ற மாபெரும் சக்திமிக்க மூலிகைகளைப்போன்றே, சாதாரணமாக எங்கும் காணப்படும் மூலிகைதான், சித்தர்களால் காயகற்ப மூலிகை எனப்போற்றப்படும் ஆடாதோடை. மனிதர்களின் உடலில், எந்த வித வியாதிகளும் அணுகாமல், நரை, திரை மற்றும் மூப்பு போன்ற உடல்பிணிகளால் பாதிப்பு அடையாமல், பன்னெடுங்காலம் ஆரோக்கியமாக வாழ வழிசெய்யும் மூலிகைகளே, காயகற்ப மூலிகைகள் ஆகும்.
ஆடாதோடை இலைகளை நன்கு அலசி, நீரில் காய்ச்சி,மூன்றில் ஒரு பங்காக நீர் சுடும்வரை வைத்திருந்து, பின்னர் தேனுடன் கலந்து பருகிவர, ஜுரம், சளி, இருமல், உடல்வலி மற்றும் ஆஸ்துமா பாதிப்புகளை நீக்கும். இந்த பாதிப்புகள் தீரும்வரை, தினமும் இந்த முறையில் இலைகளை நீரிலிட்டு காய்ச்சி பருகிவரலாம்.
ஆடாதோடை இலை,தூதுவளை இலைகளை சம அளவு எடுத்து, உலர்த்தி பொடியாக்கி, தினமும் இருவேளை தேனுடன் கலந்து உண்டுவர, சளி பிரச்னைகள் நீங்கி, நுரையீரல் பாதிப்புகள் யாவும் விலகி, இரத்தத்தை சுத்தம் செய்து, நுரையீரலை வலுவாக்கும்.
இதுவே, மனிதனைக்கொல்லும் கொடிய வியாதியாகக்கருதப்படும் எலும்புருக்கி வியாதிக்கு முதல் மருந்தாகும். முறையாக நாற்பத்தெட்டு நாட்கள் பருகிவர, கொடிய பாதிப்புகள் தரும் T.B என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அந்த காச வியாதி விலகிவிடும்.
ஆடாதோடை இலைகளுடன்,திப்பிலி,அதிமதுரம்,ஏலக்காய் மற்றும் தாளிசபத்திரி போன்ற மூலிகைகளை கலந்து பருகிவர,நாள்பட்ட இருமல்,இளைப்பு மற்றும் ஜுரம் போன்ற பாதிப்புகள் அகலும்.
ஆடாதோடை இலைச்சாற்றை வெறுமனே பருகினால், ஒவ்வாமை அல்லது சூட்டினால் உண்டாகும் வயிற்றுபோக்குகள் குணமாகும்.
ஆடாதோடை இலைச்சாற்றை தேனுடன் கலந்து பருகிவர,இரத்த கொதிப்பு, மஞ்சள் காமாலை போன்ற வியாதிகள் விலகிவிடும்.
ஆடாதோடை இலைச்சாற்றுடன் தேன் கலந்து அத்துடன் பனங்கற்கண்டு அல்லது கருப்பட்டி எனும் பனை வெல்லம் சேர்த்து, தினமும் இரண்டு அல்லது மூன்றுவேளை பருகிவர, சுவாசக் கோளாறுகளால் உண்டாகும் இரத்த வாந்தி, நுரையீரலில் சளி மிகுதியால் உண்டாகும் மூச்சுத்திணறல், வறட்டு இருமல் மற்றும் இரத்தம் கலந்து வரும் சளி போன்ற பாதிப்புகள் விரைவில் நீங்கி, உடல் நலம் சீராகும்.
இந்த சாற்றை பெரியவர்கள் ஒரு தேக்கரண்டியில் பாதி அளவும், சிறுவர்கள் அதில் பாதி அளவும் பருகிவந்தாலே, வியாதிகள் விலகிவிடும்.
ஆடாதோடை இலைகள் இரண்டு, வெற்றிலை இரண்டு ஐந்து மிளகு மற்றும் சிறு துண்டு சுக்கு இவற்றை நீரில் இட்டு காய்ச்சி, குடிநீராக அருந்திவந்தால், கடுமையான சளியால் உண்டான உடல் வலிகள் மற்றும் நெஞ்சு சளி பாதிப்புகள் விரைந்து நீங்கிவிடும்.
ஆடாதோடை இலைச்சாற்றை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, இருநூறு மிலி காய்ச்சிய பாலில் சேர்த்து பருகிவர, உடல் சூட்டினால் உண்டாகும் பேதி எனும் வயிற்றுப்போக்கு மற்றும் இரத்தம் கலந்த வயிற்று போக்கு குணமாகும்.
உடலில் ஏற்பட்ட விஷப்பாதிப்புகள் அகல, விஷம் முறிய, ஆடாதோடை
இலைகள், துளசி இலைகள், குப்பைமேனி இலைகள் இவற்றை கைப்பிடி அளவு எடுத்து, ஐந்தில் ஒரு பங்கு அளவு நீராக சுண்டக்காய்ச்சி பருகவேண்டும்.
ஆடாதோடை இலைகளை சிவனார் வேம்பு இலைகளுடன் அரைத்து பாதி எலுமிச்சை அளவு உட்கொண்டு பின்னர் சுடுநீர் பருகிவர, உடலின் உள்ளே உள்ள கட்டிகள், தோல் நமைச்சல், சொறி மற்றும் பூச்சிகள் கடிப்பதால் உண்டான விஷங்கள் விலகிவிடும்.
ஆடாதோடை இலைகளுடன் வேப்பிலை, அரிவாள்மனைப்பூண்டு இலை, சிரியா நங்கை இலை ஆகியவற்றை சம அளவில் அரைத்து, தோலில் உள்ள புண்கள் மீது இட்டுவர, புண்கள் யாவும் தழும்புகள் இன்றி மறைந்துவிடும்.
இறுக்கமான உள்ளாடைகள் அணிவதால் இடுப்பில் ஏற்படும் புண்களின் பாதிப்புகள் நீங்கி அவற்றின் தழும்புகள் மறைய, ஆடாதோடை இலைகளுடன் குப்பைமேனி இலைகளை கலந்து அரைத்து, இடுப்புப்புண்களின் மீது தடவி வர வேண்டும்.
ஆடாதோடை இலைகள், காய்கள் இவற்றை கைப்பிடி அளவு எடுத்து அரைத்து, மூன்று டம்ளர் நீரில் ஒரு டம்ளர் நீராக காய்ச்சி, தினமும் இரண்டு வேளை சாப்பிட்டுவர, சரும வியாதிகளான படை, ஊறல், விக்கல், வாந்தி வயிற்றுவலி போன்ற பாதிப்புகள் குணமாகும்.
ஆடாதோடை இலைகளை காயவைத்து சுருட்டி, புகைத்துவர, சுவாச இரைப்பு வியாதிகள் விலகும். அல்லது ஆடாதோடை இலைபொடியை, ஊமத்தை இலையில் இட்டு சுருட்டி புகை பிடித்துவர, மூச்சுத்திணறல் பாதிப்புகள் அகலும்.
குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் சளித்தொல்லைகள் நீங்க :
ஆடாதோடை இலைகளை உலர்த்தி பொடியாக்கி, தினமும் தேனில் கலந்து குழந்தைகளைப் பருகவைத்துவர, குழந்தைகளை அதிகம் பாதிக்கும் இரைப்பு, சளி இருமல் தொல்லைகளை போக்கும். ஆடாதோடை இலைகளில் உள்ள உயிர்ச்சத்தான பச்சையம் குழநதைகளின் நெஞ்சில் உள்ள சளியைக் கரைத்து, நீடித்த இருமல் தொண்டைக்கட்டு போன்ற பாதிப்புகளை சரிசெய்து, குழநதைகளின் உடல்நலனை மேம்படுத்தும். இந்த மருந்தை, ஒரு மண்டலம் எனும் அளவு அதாவது நாற்பத்தெட்டு நாட்கள் தினமும் விடாமல் குழந்தைகள் பருகிவரச் செய்தால், குழந்தைகளுக்கு எப்போதும், இருமல் சளி போன்ற சுவாச பாதிப்புகள் அணுகாது. குழந்தைகளுக்கு நெஞ்சு சளியால் ஏற்படும் இரைப்பை உடனே சரிசெய்ய, ஆடாதோடை இலைகளை மையாக அரைத்து, குழந்தைகளின் நெஞ்சில் தடவிவர, நெஞ்சு சளி உடனே கரைந்து, சுவாசம் சீராகும்.
ஆடாதோடை வேரின் மருத்துவ பலன்கள்: ஆடாதோடை வேருடன் கண்டங்கத்திரி வேர் சேர்த்து காய்ச்சிய நீரில் திப்பிலி சேர்த்து பருகிவர, வறட்டு இருமல் உள்ளிட்ட அனைத்துவகை இருமலும் ஓடிவிடும். இந்தக்கலவையை தேனில் கலந்து தினமும் தொடர்ந்து இரண்டு வேளைகள் சாப்பிட்டுவர, நரம்பு சுருட்டல், சளியினால் ஏற்படும் ஜன்னிக்காய்ச்சல் சுவாச இழுப்பு தசை வலிகள் போன்றவை குணமாகும். ஆடாதோடை வேர், ஆடாதோடை பூ இலை இவற்றை பொடியாக்கி, தினமும் பாலில் கலந்து வருகிவர, உடல் சூட்டினால் உண்டாகும் சுவாச பாதிப்புகள் மற்றும் இரைப்பு இருமல் போன்ற பாதிப்புகள் அகலும். ஆடாதோடை வேரை கைப்பிடி அளவு எடுத்து, ஐந்து டம்ளர் நீரில் இட்டு, ஒரு டம்ளர் அளவுக்கு நீர் வற்றியதும், நிறைமாத கர்ப்பிணிப்பெண்கள் இரு வேளை பருகிவர, பிரசவம் சுலபமாகி, சுகப்பிரசவமாக குழந்தையைப் பெற்றெடுப்பர்.
அனைத்துவகை காய்ச்சல் நீங்க : ஆடாதோடை இலையுடன், துளசி, கோரைக்கிழங்கு, பற்படாகம், விஷ்ணுகிராந்தி, பேய்ப்புடல், சீந்தல் மற்றும் கஞ்சாங்கோரை போன்ற மூலிகைகளை கைப்பிடி அளவு எடுத்து, ஒரு லிட்டர் நீரில் இட்டு காய்ச்சி வடிகட்டி, இருநூறு மிலி அளவாக வற்றியதும், அந்த வடிநீரை அரை டம்ளர் அளவு எடுத்து, பருகிவர, அனைத்துவிதமான ஜுரம் எனப்படும் காய்ச்சல்கள் அகலும்.
உடல் வலிகள் நீங்க : உடலில் உண்டாகும் கழுத்துவலி, கை கால் மூட்டு தோள்பட்டை வலி போன்றவை நீங்க, உலர்ந்த ஆடாதோடை இலைகளுடன் மஞ்சள், வசம்பு மற்றும் சுக்கு இவற்றை பொடியாக்கி, தவிட்டுடன் சேர்த்து துணியில் கட்டி, ஒரு சட்டியில் இந்த துணி முடிச்சை வைத்து சூடாக்கி, வலி உள்ள இடங்களில் ஒத்தடம் கொடுத்துவர, வலிகள் நீங்கும். அதிக சளியால் உண்டாகும் தலைவலி தலை பாரம் நீங்க, ஆடாதோடை இலையுடன் அதன் வேர்ப்பட்டை, கண்டங்கத்திரி சேர்த்து பொடித்து காய்ச்சிய நீரில் தேன் அல்லது கருப்பட்டி அல்லது பனங்கற்கண்டு சேர்த்து பருகிவர, பாதிப்புகள் நீங்கும். ஆடாதோடை மலரை சட்டியில் இட்டு வதக்கி, கண்களின் மீது வைத்து கட்டிவர, கண்களில் உண்டாகும் வியாதிகள் யாவும் நீங்கிவிடும். இதுபோல எண்ணற்ற நற்பலன்களை மனிதனுக்கு தரும் ஆடாதோடை ஒரு அற்புத மூலிகை மட்டுமல்ல, மனித உடலுக்கு நீடித்த ஆயுள் தரும், ஒரு காயகற்ப மூலிகையுமாகும்.


